ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், நிறுத்தப்பட்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பின்புற நீச்சல் குளத்தில் விழுந்தது.
இந்த சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் மவுண்ட் ட்ரூட் பகுதியின் வின்சென்ட் தெருவில் நடைபெற்றது. ஒரு வெள்ளை நிற டொயோட்டா கேம்ரி கார், திடீரென வேகமாக சென்று, எல்லை வேலியை உடைத்து, பக்கத்து வீட்டின் மீது மோதியதில், குளத்தின் கண்ணாடி வேலி நொறுங்கி, கார் தண்ணீரில் மூழ்கியது.
View this post on Instagram
இது தொடர்பாக வெளியிட்ட காட்சிகளில், குளத்தில் முழுமையாக மூழ்கியிருந்த காரையும், சேதமடைந்த வேலி மற்றும் ஓடுகளையும் காண முடிந்தது. அவசர சேவைப் பணியாளர்கள் வந்ததற்கு முன்பே, கார் ஓட்டுநர் தானாகவே வாகனத்திலிருந்து வெளியேறியதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
பலத்த சத்தம் கேட்டதும், 44 வயதான வீட்டு உரிமையாளர் உடனே வெளியே ஓடி வந்து உதவி செய்ய முயன்றார். உடைந்த கண்ணாடிப் பலகைகளைத் தாண்டி குளத்திற்குள் சென்று யாராவது சிக்கியுள்ளார்களா என்று பார்த்தபோது, கண்ணாடி துண்டுகளால் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
மேலும் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மவுண்ட் ட்ரூட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.
மேலும் விபத்துக்கான காரணம் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார் எவ்வாறு திடீரென நகர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளில் வாகன பாதுகாப்பு குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
