மும்பைக்கு அருகிலுள்ள உல்ஹாஸ்நகர் முகாம் எண் 5 பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தெருநாய்கள் துரத்திய அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளிப் பையை சுமந்து சென்ற அந்த சிறுமி மீது, ஐந்து முதல் ஆறு தெருநாய்கள் கடிக்க பாய்ந்தது. இந்த சம்பவம், அருகிலுள்ள கடைகளில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது அந்த மாணவி மிகவும் பயந்துபோன நிலையில் ஓடி அருகிலிருந்த கடைக்குள் தஞ்சம் பெற்றார். அங்கிருந்த நபர் மாணவிக்கு  உடனடியாக பாதுகாப்பளித்தார். பின்னர் மற்றொரு நபர், பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி நாய்களை துரத்த முயன்றதை வீடியோவில் காணலாம். இந்த சம்பவம் கடந்த ஜூலை 30ஆம் தேதி நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ஹாஸ்நகரில் உள்ள நகராட்சிப் பள்ளிக்கு ஏழை குழந்தைகள் அதிகமாக வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆனால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாகி, குழந்தைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கே பயப்படும் நிலை உருவாகியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை துறையைச் சுட்டிக்காட்டியுள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.