உத்தரபிரதேசம், பரேலியில் மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில், ஒரு பெண்ணை திருடி என தவறாக சந்தேகித்து பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

வீடியோவில், அந்த பெண் கை கூப்பி கெஞ்சும் நிலையில், சிலர் அவளது தலைமுடியைப் பிடித்து அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதலால் பெண் காயமடைந்தார். இந்த சம்பவம் பரேலியின் கிலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரதாரி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது.

நேபாளத்தைச் சேர்ந்த அந்த பெண் வேலைக்காக நொய்டாவிலிருந்து பரேலிக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று ஒரு வீட்டின் கூரையில் போனில் பேசிக்கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்த சிலர் திருடன் வந்துள்ளார் என நினைத்து கூச்சலிட்டனர். அப்போது பயந்துவிட்ட அந்த பெண் கூரையிலிருந்து கீழே குதித்ததால் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

பின்னர், அந்தப் பெண்ணை மக்கள் பிடித்து, ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கினர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண்ணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரேலி எஸ்பி மனுஷ் பரீக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். வதந்திகளை நம்பி, சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்.

சந்தேகமான எதையும் எதிர்கொண்டால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். இப்போது நாடு முழுவதும் ட்ரோன்கள், திருடர்கள் குறித்த வதந்திகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியம் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.