மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆஷீஷ் சிங் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த புதிய விதி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் நோக்கம், சாலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்துகள் மற்றும் மரணங்களைத் தடுப்பதாகும்.

இந்நிலையில், இந்தூர் ஏரோட்ரோம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில், ஹெல்மெட் இல்லாமல் வந்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பெற முடியாத நிலையை சமாளிக்க சில இளைஞர்கள் ஹெல்மெட்டை ₹10 முதல் ₹20 வரை வாடகைக்கு கொடுக்கும் புதிய முறையை தொடங்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by MP Times (@mp_times_24)

வெறும் பெட்ரோல் எடுக்கும் சில நிமிடங்களுக்கு ஹெல்மெட்டை வழங்கி பின்னர் திரும்ப பெற்று மீண்டும் மற்றவர்களுக்கு கொடுக்கும் செயல் நடைபெறுகிறது. இந்த காட்சி ஒரு வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். “பாதுகாப்பு என்ற காரணத்தை வியாபாரமாக மாற்றியுள்ளனர்” என்றும், “இது போலியான ஒழுங்கு இல்லையா?” என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிர்வாகத்தின் நல்ல நோக்கத்தையும் சிலர் தவறாக பயன்படுத்தி வருவதை கண்டித்து, இந்த வியாபாரங்களை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.