சட்டமன்றக் கூட்டத்தொடரின் நேரலை (Live Telecast) ஒளிபரப்பு விவகாரத்தில், புதிய தவெக அரசுக்கு எதிராக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துச் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் பழைய காட்சியும் சூழ்நிலையும் அப்படியேதான் தொடர்கிறது என்று அதிமுக ஐடி விங் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சட்டப்பேரவை விவாதங்களின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் முக்கியக் காட்சிகள் மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் முறையாக நேரலையில் காட்டப்படுவதில்லை என்றும், ஆளுங்கட்சித் தரப்பு மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் கூறி, “நல்லா இருக்கு சார் உங்க நியாயம்!” என்ற பாணியில் தவெக அரசை அதிமுகவினர் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இதே நேரலை விவகாரத்தை முன்வைத்து திமுகவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசும் அதே வழியைப் பின்பற்றுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக ஐடி விங் நெட்டிசன்கள் மீம்கள் மற்றும் பதிவுகள் மூலம் விமர்சித்து வருகின்றனர்.
