உத்தரப்பிரதேசம் பிருந்தாவனத்தில் நடைபெற்ற சொற்பொழிவில் மத பேச்சாளர் அனிருத்தாச்சார்யா வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறியதாவது, “இன்றைய 25 வயது பெண்கள் ஏற்கனவே பல ஆண்களுடன் இருந்திருப்பார்கள்.
இவர்கள் தூய்மையானவர்கள் அல்ல; மரியாதைக்கு தகுதியற்றவர்கள்.” இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் தீவிர விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. பெண்களின் உறவுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவதூறு கூறுவது பெண் விரோதம் என பலரும் கண்டித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை திஷா பதானியின் சகோதரியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான குஷ்பூ பதானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு வீடியோவில் அவர் கூறியது, “பெண்கள் மீது இவ்வாறு பேசியது தேச விரோதப் பேச்சாகும்.
பெண்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள்? பாலின சமத்துவத்தை இழிவாக பார்க்கும் இதுபோன்ற உரைகளை சமூகம் ஏற்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். இது போல பொறுப்பற்ற பேச்சுகள் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய மகளிர் ஆணையத் தலைவர் பபிதா சவுகா இதுகுறித்து பேசியபோது, “அந்த பேச்சாளர் ஒரு மத சொற்பொழிவாளராக இருக்கலாம். ஆனால் சமூகத்தில் அவருக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அவர் கூறிய வார்த்தைகள் மதிப்பற்றவை என்று கண்டித்துள்ளார்.
மகளிர் ஆணையம் தற்போது இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்கையை கோரி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, அனிருத்தாச்சார்யா விளக்கமளித்து ஒரு வீடியோவால் மன்னிப்பு கேட்டுள்ளார். “நான் சில பெண்களை மட்டுமே குறிவைத்தேன்.
ஆனால் எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார். இருப்பினும், அவரது விளக்கம் சமூகத்துக்கு ஏற்றதாக இல்லை. பலர் “தங்களது தகுதியில்லாத கருத்துகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்பது போதுமானது அல்ல” என்று தெரிவித்துள்ளனர்.
