இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 (T20) தொடரின் முதலாவது போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராகக் களம் இறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இந்திய சீனியர் அணியில் விளையாடும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடிய மிக இள வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். இதுவரை ஐபிஎல், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இந்தியா ஏ அணிக்காக விளையாடி மைதானத்தை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைக் காண இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, அயர்லாந்து அணியினரும் அதன் ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அயர்லாந்து அணியின் கேப்டன் லார்கன் டக்கர், வைபவ் சூர்யவன்ஷி குறித்து தனது வியப்பையும் பயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 15 வயது சிறுவன் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது நம்ப முடியாத ஒரு விஷயம் என்றும், இவ்வளவு கடுமையான உழைப்பு நிறைந்த தொழில்முறை கிரிக்கெட் யுகத்தில் இது சாத்தியமாகும் என்று தான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், அயர்லாந்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் வைபவ் விளையாடுவதைப் பார்க்கத் தயாராக உள்ளதால் இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் 75 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுத் துவம்சம் செய்துள்ளதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரைப் பற்றித் தங்களால் இயன்றவரை தேடிப் படித்துத் தெரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளதாகவும் டக்கர் தெரிவித்துள்ளார்.
