உத்தரகண்ட் மாநிலம் பீம்தாலில் உள்ள கிராஃபிக் எரா ஹில் பல்கலைக்கழகத்தில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த லக்னோவைச் சேர்ந்த மாணவி வாசவி தோமர் (வயது 21), கடந்த புதன்கிழமை தனது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பல்கலை நிர்வாகம் இது தற்கொலையென அறிவித்துள்ளது. ஆனால் மாணவியின் குடும்பத்தினர், இது திட்டமிட்ட கொலை என்றும், மாணவியை ராகிங் செய்த சீனியர் மாணவர்களை எதிர்த்ததற்காக தான் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மரணத்திற்கு ஒரு நாள் முன்பு, வாசவி தனது தாயாரிடம் தொலைபேசியில் பேசும் போது, “என் அறைத் தோழி ஒரு நர்சிங் மாணவி, அவரை சீனியர்கள் ராகிங் செய்ய முயன்றார்கள். நான் தலையிட்டேன். எனக்கு மிரட்டல் விடுத்தாங்க” என புகாரளித்திருந்தார்.
இதன் பின்னர், சீனியர் மாணவர்களில் ஒருவர் தன்னுடன் வாக்குவாதம் செய்வதை வீடியோவில் பதிவு செய்து, தன் தாயிடம் அனுப்பியிருந்தார். இதனால் வாசவிக்கு ஏற்கனவே அழுத்தம் இருந்தது தெளிவாகிறது.
வாசவி மரணத்திற்கு பிறகு, போலீசாரால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதற்கான அடையாளம் இல்லை, ஆனால் கழுத்து நெரித்ததற்கான தடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலைக்கான நோட்டு எதுவும் கிடைக்கவில்லை.
மாணவியின் தாய் பினு சிங் கூறுகையில், “என் மகள் தற்கொலை செய்வதற்கான எந்த காரணமும் இல்லை. அவள் செயற்கை நுண்ணறிவு படிக்க ஆசைப்பட்டாள். ராகிங்கை எதிர்த்ததற்காகத்தான் அவளை கொலை செய்திருக்கிறார்கள்” என்றார்.
இந்நிலையில், வாசவி வீட்டிற்கு வருவதற்காக ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும், தற்கொலை என நிர்வாகம் கூறுவது அப்பட்டமான பொய். அவரது குடும்பத்தினர், இது போன்ற சம்பவங்கள் மறைக்கப்படக்கூடாது என்றும், ஒரு மாணவியின் உயிரை பறித்த அந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
