கிரேட்டர் நொய்டா மேற்கு, கவுர் சிட்டி-2 பகுதியில் அமைந்துள்ள அம்ரபாலி கோல்ஃப் ஹோம்ஸ் சொசைட்டியில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

24 வயதான ஷிபு இக்பால் என்பவர், தனது காதலியைக் கடுமையாக தாக்கிய காட்சிகள் வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. வீடியோவில், அந்த பெண் தனது உயிரைக் காக்க வாலிபரிடம் கெஞ்சுகிறார்.

வீடியோவில், ஷிபு தனது காதலியை பால்கனியில் இழுத்துச் செல்வதும், தரையில் தள்ளுவதும் தெளிவாகக் காணப்படுகிறது. அந்த பெண், உடலளவில் சோர்ந்து கதவை நோக்கி செல்ல முயற்சி செய்தபோது, ஷிபு அவளை மீண்டும் பால்கனி தடுப்பு கம்பியை நோக்கி தள்ளி தொடர்ந்து தாக்குகிறார்.

சம்பவத்தை எதிர் வீட்டில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஷிபு இக்பாலை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு எதிராக தாக்குதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலின் படி, இவர்கள் இடையே PUBG விளையாட்டு தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்டையின் போது, பெண் அவரது மொபைலை தூக்கி எறிந்ததால், கோபமடைந்த ஷிபு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம், பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது. சமூக ஆர்வலர்கள், இப்படிப்பட்ட சம்பவங்களில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.