அரசு வேலைக்காகத் தந்தையையே மகன் கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பரோரா பகுதியைச் சேர்ந்த துலேஷ்வர் நோனியா, அங்குள்ள பொதுத்துறை நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது மகன் விஜய் சவுகான் தந்தையின் அரசு வேலையைக் கருணை அடிப்படையில் பெற விரும்பினார். தந்தை இறந்தால் மட்டுமே தனக்கு வேலை கிடைக்கும் என்பதால், தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்ட விஜய் சவுகான், இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அமித் சிங் மற்றும் அகிலேஷ் மல்லா ஆகியோரை 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி கூலிப்படையாக அமர்த்தினார்.
தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு விஜய் சவுகான் வெளியூர் சென்றுவிட, கடந்த 19-ஆம் தேதி இரவு நிலக்கரி சுரங்கப் பணி முடிந்து வெளியே வந்த துலேஷ்வரை கூலிப்படையினர் மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட துலேஷ்வர், பெரிய கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகமும் சிதைக்கப்பட்டது. பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காக உடலைச் சாலையின் நடுவே போட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து விசாரித்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அமித் சிங் மற்றும் மல்லாவைப் பிடித்து விசாரித்தபோது, வேலைக்காக மகன் செய்த இந்த சதி அம்பலமானது. இதையடுத்து தந்தை என்றும் பாராமல் கொடூரமாகக் கொலை செய்யத் தூண்டிய மகன் விஜய் சவுகான் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
