ஹைதராபாத்தை சேர்ந்தவர் பல்லபு சுரேஷ்குமார் என்கிற சூர்யா பாய். இவரை கோல்டுமேன் என்று அழைப்பார்கள். எப்போதும் தங்க நகைகளுடன் வலம் வருவார். இதன் காரணமாகவே அந்த பகுதியில் அவர் மிகவும் பிரபலமாக இருந்ததார். இந்த நிலையில் சுரேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதி அளித்தபடி தங்கத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்ததால் பணம் கொடுத்தவர்கள் நேரடியாக அவரை சந்தித்து பேசி உள்ளனர்.
அப்போது சில காரணங்களை கூறி மூன்று ஐபோன்கள் மற்றும் 20 லட்ச ரூபாய்க்கான செக் ஆகியவற்றை கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனால் ஒரு கும்பல் பாதிக்கப்பட்டவர்களை அணுகி செல்போன்கள் மற்றும் காசோலையை பிடுங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 32 லட்சம் ரூபாயை அவர் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி போலீசார் சுரேஷ் குமாரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
