மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில், தினக்கூலி வேலைக்குப் பதிலாக ஒரு நிரந்தர வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கனவோடு இ-ரிக்‌ஷா வாங்கிய பெண் ஒருவர், விரக்தியின் விளிம்பில் அதனை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியா மௌர் என்ற அந்தப் பெண், சுமார் 2.50 லட்சம் ரூபாய் கடனில் இந்த வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால், வாகனம் வாங்கிய இரண்டு மாதங்களிலேயே பழுதாகி நின்றுள்ளது. இது தொடர்பாக பலமுறை ஷோரூமுக்குச் சென்று முறையிட்டும், அவர்கள் பழுதுபார்க்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒருபுறம் வாகனம் ஓடவில்லை, மறுபுறம் வாங்கிய கடனுக்கான தவணையை (EMI) கட்ட வேண்டிய கட்டாயம் என மன உளைச்சலுக்கு ஆளான அவர், ஷோரூம் வாசலிலேயே பெட்ரோல் ஊற்றி வாகனத்தை எரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் மீண்டும் கூலி வேலைக்குச் செல்ல நேரிட்டதாகவும், ஷோரூம் ஊழியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வாகனத்தில் உற்பத்தி குறைபாடு எதுவும் இல்லை என்றும், பேட்டரி தொடர்பான பிரச்சனைகளுக்கு நிறுவனம் பொறுப்பல்ல என்றும் ஷோரூம் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

“>

 

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் தனக்கு முழு இழப்பீடு அல்லது புதிய வாகனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.