மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், 20 வயது இளைஞர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ஜெயின் என்பவரின் ஒரே மகனான பரஷ் (என்கிற கேஷு), வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு மற்றும் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த கேஷு ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டே, தனது தாயாருக்கு உதவியாக ஜவுளிக்கடை ஒன்றையும் கவனித்து வந்துள்ளார். இதுவரை எந்தவிதமான உடல்நலக் குறைபாடும் இல்லாத ஆரோக்கியமான இளைஞர் இப்படி திடீரென உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு “சைலண்ட் அட்டாக்” எனப்படும் அறிகுறியற்ற மாரடைப்பாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக இது போன்ற மரணங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.