தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கான உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்யக் கால அவகாசம் தேவை என முதலமைச்சர் விஜய் அறிவித்ததை, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் வாக்குறுதி அளித்தபடி ரூ. 2,500 வழங்காமல், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாயைக் கூட தராமல் இழுத்தடிப்பது தான் உங்கள் மாற்றமா என திமுகவினர் கேள்வி எழுப்பினர். திமுகவின் இந்த விமர்சனங்களுக்கு தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அதிரடியான பதிலடிகளை வழங்கி வருகின்றனர்.

இதனால் கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக, ‘அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை’ என வாக்களித்துவிட்டு, பின்னர் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனத் திட்டத்தை மாற்றியதையும், சுமார் 28 மாதங்கள் காலதாமதம் செய்தே இத்திட்டத்தைத் தொடங்கியதையும் தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு திட்டத்தைச் செயல்படுத்திய திமுகவிற்கு, நிர்வாக ரீதியான மறுசீரமைப்பிற்காக கால அவகாசம் கேட்கும் முதலமைச்சர் விஜயை விமர்சிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என அவர்கள் சாடியுள்ளனர்.