சென்னை நேற்று மாலை நடைபெற்ற ‘சைலன்ட் இன்ஃப்ளூயன்ஸர்’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும், அவரது அரசியல் வெற்றி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். பலராம் – பெர்ரி நடித்துள்ள இந்த ஆல்பத்திற்கு அஸ்வமித்ரா இசையமைக்க, ஜி.வி. பிரகாஷ் பாடலைப் பாடியுள்ளார். இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது,

இன்று அனைவரும் தொலைக்காட்சி முன்பே அமர்ந்திருக்கும் சூழலில், விஜய் அரசியலுக்கு வரும்போது எத்தனை பேர் வாக்களிப்பார்கள், கட்சி நிலைத்து நிற்குமா என்ற பல கேள்விகள் எழுந்தன. ஆனால், ஒரு மாபெரும் வெற்றியைச் சபையில் நிரூபித்துக் காட்டியுள்ள கலை உலகச் சகோதரர் விஜய்க்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அரசியலில் இறங்கிய முதல் முயற்சியிலேயே ஒரே அடியில் வெற்றியைச் சாதித்துக் காட்டியவர் விஜய் தான். இதனைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்தும் முடியாத ஒன்றை விஜய் இன்று சாதித்துள்ளார். அவர் முதல்வராக அமர்ந்திருப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

விஜய் கட்சி ஆரம்பித்த போதே, அவர் ஒரு மாற்று ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என நான் இதே மேடையில் கூறினேன். ஒரு மனிதன் எடுத்த முடிவில் எவ்வளவு உறுதியாக இருக்கிறாரோ, அவருக்கு வெற்றி நிச்சயம். அந்த வலிமை விஜயிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே கணித்துச் செயல்படும் விவேகம் அவரிடம் உள்ளது.

விஜயிடம் இருக்கும் அளப்பரிய விவேகத்திற்குத் தோல்வியே கிடையாது. நிச்சயமாக இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர் இந்த ஆட்சியில் இருப்பார் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். நம் குடும்பத்தில் இருந்து ஒருவர் வரும்போது அவரை நாம் மனதார வாழ்த்துவோம் என்று அவர் பேசினார். 1அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில், ஆர்.வி. உதயகுமாரின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.