அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஆப்டம் (Optum) நிறுவனத்தில் சீனியர் டைரக்டராகப் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கரன் குப்தா, செய்துள்ள வினோதமான ஊழல் தற்போது உலகத்தையே அதிரவைத்துள்ளது. ஆண்டுக்கு 2.3 கோடி ரூபாய் கைநிறையச் சம்பளம் வாங்கிய கரன், பேராசை காரணமாகத் தனது நண்பர் ஒருவரை நிறுவனத்தின் பணியாளர் பட்டியலில் முறைகேடாகச் சேர்த்துள்ளார். அந்த நண்பர் ஒரு நாள் கூட வேலைக்கு வராத ‘கோஸ்ட்’ (Ghost) ஊழியராக இருந்தபோதிலும், அவருக்கு ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்த நண்பருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் சரிபாதியான 45 லட்சம் ரூபாயைக் கரன் கமிஷனாகத் தனது பைக்குள் லாவகமாகச் சுருட்டி வந்துள்ளார்.

​சுமார் நான்கு ஆண்டுகளாக இந்த நூதன மோசடி எவ்விதத் தடையுமின்றி அரங்கேறி வந்துள்ளது. வேலை செய்யாத அந்தப் பெயரளவு ஊழியருக்குத் துல்லியமாகச் சம்பளம் போனது மட்டுமன்றி, ஆண்டுதோறும் பதவி உயர்வும் போனஸும் கூட வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்தச் சட்டவிரோதச் செயலைக் கண்டுபிடித்த நிறுவனம், உச்சக்கட்டக் கடுப்பாகி கரனை உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. கைநிறையச் சம்பளம் இருந்தும், குறுக்கு வழியில் கோடி கோடியாகச் சம்பாதிக்க நினைத்த அதிகாரியின் இந்த ‘உலக மகா ஊழல்’ தற்போது கார்ப்பரேட் உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.