மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் “ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காக்க இணைந்து போராடுவோம்” என இருவருக்கும் ராகுல் காந்தி தனித்தனியாக அவசர அழைப்பு விடுத்துள்ளார். ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களில் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தனர்.

​இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் எக்ஸ் (X) பதிவைக் குறிப்பிட்டுப் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “அரசியலமைப்பு மீதான நமது அர்ப்பணிப்பிலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் நாம் என்றும் ஒன்றுபட்டு நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துப் பதிவைக் குறிப்பிட்டுப் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “அரசியலமைப்பையும், நமது நாட்டின் கூட்டாட்சி முறையையும் பாதுகாப்பதற்கான நமது ஒன்றுபட்ட உறுதிப்பாடு எப்போதும் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக மற்றும் தவெக இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்து வரும் வேளையில், இரு முக்கிய தலைவர்களுக்கும் ராகுல் காந்தி ஜனநாயகத்தைக் காக்க இணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ள இந்த தகவல் தற்பொழுது தேசிய அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.