தமிழக முதலமைச்சரும், தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவருமான விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் ‘4-வது ஆண்டு தவெக கல்வி விருதுகள் விழா’ விரைவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தவெக தலைமை தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இவ்விழாவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் கலந்து கொண்டு விருதுகளையும், கல்வி ஊக்கத்தொகையையும் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.
இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதியான மாணவர்களின் முழுமையான கல்வித் தகவல்கள் மற்றும் விவரங்களை உடனே சேகரிக்குமாறு தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலைமை கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி மேடையில் முதல்வர் விஜய் நேரில் தோன்றவுள்ள இந்த தகவல், தற்பொழுது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
