சீன இளைஞர்களிடையே தற்போது ‘கிளிங் ராப் டயட்’ (Cling Wrap Diet) என்ற பெயரில் ஒரு வினோதமான மற்றும் ஆபத்தான பழக்கம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற வெறியில், வாயில் பிளாஸ்டிக் கவர்களைக் கட்டிக்கொண்டு, உணவை மென்று சுவைத்த பின் அப்படியே துப்பிவிடுகின்றனர். இதன் மூலம் மூளைக்கு வயிறு நிறைந்த உணர்வு கிடைப்பதாகவும், ஆனால் கலோரிகள் உடலுக்குள் செல்லாது என்றும் அவர்கள் நம்புகின்றனர். பார்ப்பதற்கே முகம் சுளிக்க வைக்கும் இந்தச் செயல், உடல் எடையைக் குறைக்க உதவும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

​உடல்நல நிபுணர்களின் கருத்துப்படி, இத்தகைய முறையற்ற பழக்கவழக்கங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை முற்றிலுமாகத் தடுத்து, பிற்காலத்தில் கடுமையான பசி மற்றும் அதிகப்படியான உணவு உண்ணும் (Overeating) கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும், வாயில் பிளாஸ்டிக் கட்டிக்கொள்வது மூச்சுத்திணறல் உள்ளிட்ட உயிருக்கே ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக்கூடும். சமூக வலைதளங்களில் வைரலாகும் இதுபோன்ற ‘ஷார்ட்கட்’ முறைகளை நம்பாமல், முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.