செப்டம்பர் 1, 2025 முதல் நாடு முழுவதும் பல்வேறு விதிகளில் முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முக்கியமான மாற்றங்கள் வருமாறு:
எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல், சில கிரெடிட் கார்டுகளில்,
டிஜிட்டல் கேமிங் தளங்கள்
சில மர்சண்ட் சேவைகள்
அரசு பரிவர்த்தனைகள் என்னும் பரிவர்த்தனைகளுக்கு இனி வெகுமதி புள்ளிகள் (Reward Points) வழங்கப்படாது. இந்த மாற்றம், லட்சக்கணக்கான அட்டைதாரர்களின் சலுகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜி.எஸ்.டி. அடுக்குகளில் மாற்றம் எதிர்பார்ப்பு
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, பல பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி அடுக்குகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில தேவையான பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
LPG சிலிண்டர் விலையில் மாற்றம்
ஒவ்வொரு மாதமும் போலவே, செப்டம்பர் 1 முதல் LPG சிலிண்டர் விலைகளில் மாற்றம் நடைமுறைக்கு வரும்.
ஆகஸ்ட் மாதம், 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ₹33.50 குறைக்கப்பட்டது.
இந்த மாதம், வீட்டு உபயோக சிலிண்டர்களிலும் விலை குறைவுக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது, பொதுமக்களின் சமையல் செலவைக் குறைக்கும் உதவியாக அமையும்.
அஞ்சல் சேவையில் மாற்றம்
இந்திய அஞ்சல் துறை ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
செப்டம்பர் 1 முதல்,
பதிவு அஞ்சல்கள் (Registered Post)
விரைவு அஞ்சல் (Speed Post)
இரண்டும் ஒன்றிணைந்த சேவையாக செயல்படும்.
இதன் காரணமாக, பதிவு அஞ்சல்களுக்கு தனித்துவமான சேவை இனி இருக்காது. எல்லா பதிவு அஞ்சல்களும் இப்போது விரைவாக அனுப்பப்படும், ஆனால் சேவைக்கட்டணங்கள் மற்றும் டெலிவரி முறை மாற்றப்படும்.
CNG மற்றும் PNG விலை மாற்றம்
CNG மற்றும் PNG எரிவாயுக்கள் ஒவ்வொரு மாதமும் விலை மாற்றத்துக்குட்பட்டவையாகும். கடந்த சில மாதங்களில் விலை நிலையாக இருந்தாலும்,
செப்டம்பர் மாதத்தில்,
CNG (சீ.என்.ஜி)
PNG (பி.என்.ஜி) விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பொதுமக்களின் பயண மற்றும் சமையல் செலவுகளில் தாக்கம் ஏற்படுத்தும்.
மேலும் இதேபோன்று வெள்ளியின் தரத்தை உறுதி செய்ய வெள்ளி பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் டிராய் உத்தரவின்படி மோசடி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க Block chain System அமல்படுத்தப்பட இருக்கிறது.
