பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தந்தையும் மகளும் உயிருடன் எரிந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியிருந்த 50 வயது தந்தை வினோத் குமார், தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டிற்குள் சிக்கிக் கொண்டார்.

முதலில் வீட்டை விட்டு வெளியேறிய அவரது 10 வயது மகள் சோட்டி குமாரி, தீப்பிழம்புகளுக்கு நடுவே சிக்கியிருந்த தனது தந்தையை மீட்டெடுக்கத் துணிச்சலுடன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனால், தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதால் இருவராலும் வெளியே வர முடியாமல் போனது.

இந்த விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற தாய் ரீனா தேவியும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்கு சகோதரிகளில் இளையவரான சோட்டி, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தந்தையைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர், எனினும் அதற்குள் இரண்டு உயிர்கள் பறிபோய்விட்டன.