அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுற்றுலாத் தலமொன்றில் சில இளைஞர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்தப் பெண் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைப் பார்த்து மோசமான சைகைகள் செய்து, அவரை வெளிநாட்டவர் என நினைத்து கேலி செய்தது. பெண் இந்தியில் பதிலளித்து, “நானும் இந்தியப் பெண்தான், அருணாச்சல பிரதேசத்தை பற்றி கேள்விப்பட்டதில்லையா?” என கோபமாகக் கேட்டார். இளைஞர்கள் தாங்கள் உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினர். அவர்கள் மெல்லிய குரலில் பெண்ணை கேலி செய்ததாகவும், அதனால் அவர்களின் செயலை வீடியோவில் பதிவு செய்து பதிலளித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @tomartalks என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டு, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், வடகிழக்கு மாநில மக்களை இந்தியர்களாக ஏற்காத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி, “இது வெறும் பாகுபாடு மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான தொந்தரவு” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் அந்தப் பெண்ணின் தைரியத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
