உத்தரபிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த 20 வயது இளைஞர் விஷால். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் மர்மமாக காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகித்து, காவல்துறையில் புகார் அளித்தனர். விஷாலின் மொபைல் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த காவல்துறை, அவர் காணாமல் போன நாளில் தனது உறவினர் வீரு குமாருடன் பலமுறை பேசியதைக் கண்டறிந்தது. மேலும், வீருவின் மைத்துனியுடன் விஷால் நீண்ட நேரம் பேசியதும் தெரியவந்தது.

இதனிடையே விசாரணையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காஜிப்பூரில் கங்கைக் கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் விஷாலுடையதாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தது. இதை உறுதி செய்ய டி.என்.ஏ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. வீருவை விசாரித்தபோது, அவர் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தினார். விஷால், பள்ளித் தேர்வின் போது வீருவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, வீருவின் மைத்துனிக்கும் விஷாலுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த வீரு, தனது நண்பர் திலீப் குமாருடன் சேர்ந்து விஷாலை கொலை செய்ய திட்டமிட்டார்.

ஆகஸ்ட் 3, 2024 அன்று, வீருவும் திலீப்பும் விஷாலை சாரநாத் பகுதியில் உள்ள ராம்சந்திபூர் பாலத்திற்கு அழைத்தனர். அங்கு அவருக்கு மது கொடுத்து, கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் தாக்கி, உடலை கங்கை ஆற்றில் வீசினர். இந்தக் கொடூரமான கொலையை அறிந்த காவல்துறை, வீரு மற்றும் திலீப் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. உடலின் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் வழக்கு முழுமையாக உறுதியாகும் என காஷி மண்டல துணை ஆணையர் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.