விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை மற்றும் லட்சியம் என்னவென்றே தெரியாமல், வெறும் கூச்சல் மட்டுமே போடும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்று அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாகச் சாடினார்.
அதேபோல், தேர்தல் வரும்போது மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை” என்று விமர்சித்த உதயநிதி, பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக இப்போது அதன் இலையாகவே மாறிவிட்டதாகக் கிண்டல் செய்தார்.
டெல்லி தலைவர்களின் கால்களைப் பார்த்துக் கொண்டு நடப்பதால்தான் அதிமுக முட்டுச்சந்தில் நிற்பதாகவும், தோல்வியடைந்த மோடியும் எடப்பாடியும் கூட்டணி அமைத்தாலும் தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு சொல்லும் “டபுள் இன்ஜின்” அரசால் பீகார், உபி போன்ற மாநிலங்கள் 6 சதவீத வளர்ச்சியைக்கூட எட்டவில்லை என்றும், ஆனால் தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுவிட்டதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
