மதுரை அருகே சாமநத்தம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரும் அதிமுக நிர்வாகியுமான செந்தில்குமார், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது மனைவியாலேயே கூலிப்படை ஏவிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை கடையைத் திறக்கச் சென்றபோது மறைந்திருந்த ஒரு கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்துச் சிலைமான் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி காவியாவுக்கும் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்தது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட காவியா தனது காதலன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து செந்தில்குமாரின் டீக்கடை அருகே மது அருந்திவிட்டு விடிய விடியக் காத்திருந்து, அதிகாலையில் வந்த செந்தில்குமாரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாகக் காவியாவைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
தப்பியோடிய மற்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவியின் செயல் மதுரையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
