ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “நான் நினைத்தால் வெறும் 60 நிமிடங்களில் ஈரானை முழுமையாகத் தரைமட்டமாக்கி விடுவேன்!” என ட்ரம்ப் முழங்கியுள்ளது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய ராணுவ இலக்குகளை ஒரு மணி நேரத்திற்குள் அழிக்கும் வலிமை அமெரிக்காவிடம் இருப்பதாகவும், அதன் பிறகு ஈரான் மீண்டும் ஒரு நாடாகத் தலைதூக்கவே முடியாது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

​இதுமட்டுமின்றி, உலகையே அச்சுறுத்தும் ஒரு ரகசியத் தகவலையும் ட்ரம்ப் உடைத்துள்ளார். உலகம் முழுவதும் ஈரானின் 1,700-க்கும் மேற்பட்ட ‘ஸ்லீப்பர் செல்கள்’ (Sleeper Cells) ஊடுருவி இருப்பதாகவும், இவை எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதே சந்தேகம்தான் எனத் தெரிவித்த ட்ரம்ப், அந்த நாட்டு மக்கள் மெஷின் கன் முனையில் ஒடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் ஆட்சி விரைவில் கவிழும் என கூறும் ட்ரம்ப், இந்தப் போர் முடிந்தவுடன் உலகப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.