ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்லாமிய வழக்கப்படி 24 மணி நேரத்திற்குள் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கமேனி இறந்து 13 நாட்களாகியும் இன்னும் அவரது உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்பது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இறுதி ஊர்வலத்தில் கூட்டம் கூடினால், இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தலாம்” என்ற பயமே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. இதனால், கமேனியின் உடல் தற்போது ஒரு ரகசியமான, குளிர்ந்த அறையில் (Cold Storage) பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

​1989-ல் ஈரானின் முதல் தலைவர் குமேனி இறந்தபோது, சுமார் 1 கோடி பேர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இப்போதும் அதேபோன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச் சடங்கை நடத்த ஈரான் விரும்புகிறது. ஆனால், போர் உச்சத்தில் இருப்பதால், மக்கள் கூட்டத்தின் மீது ஏவுகணைகள் பாயலாம் என ஈரான் அரசு அஞ்சுகிறது. “உயிரோடு இருந்தபோது மிரட்டியது போக, இறந்த பிறகும் கமேனியைப் பார்த்து எதிரிகள் நடுங்குகிறார்கள்” என ஈரான் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். கமேனியின் உடல் அவரது பிறந்த இடமான ‘மஷாத்’ நகரில் உள்ள இமாம் ரசா ஆலயத்தில் அடக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. சரியான பாதுகாப்புச் சூழல் அமையும் வரை கமேனியின் உடல் மண்ணுக்குப் போகப்போவதில்லை என்ற முடிவில் ஈரான் அரசு உறுதியாக உள்ளது.