திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பெற்ற தாயே தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விற்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, அடுத்தடுத்து இடைத்தரகர்கள் மூலம் வேலூர் மற்றும் ஈரோடு எனப் பல்வேறு மாவட்டங்களுக்குக் கைமாறிச் சென்றுள்ளது. இறுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள குழந்தை இல்லாத தம்பதி ஒருவருக்கு, சட்டவிரோதமாக சுமார் 13 லட்ச ரூபாய்க்கு அந்தக் குழந்தை விற்கப்பட்டது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

​இந்தக் குழந்தை கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை குறித்துக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியப் புகாரை அடுத்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து, குழந்தையை விலைக்கு வாங்கிய குமாரபாளையத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் இடைத்தரகர்கள் உட்பட இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை தற்போது பாதுகாப்பாகக் குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நெட்வொர்க்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.