தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்கரா” விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் போது ஐந்து பயங்கரவாதிகளுடன் இவர் துணிச்சலாகப் போராடினார்.
மேலும் அந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இவருடைய வாய் மற்றும் தோள்பட்டை பகுதியில் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி பயங்கரவாதிகளை வீழ்த்தி தன் குழுவினரைக் காப்பாற்றினார்.
இதனால் இவருடைய இந்த இணையற்ற வீர தீரச் செயலைப் பாராட்டி, கடந்த ஜூன் 8 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவருக்கு கீர்த்தி சக்கரா விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த உயரிய விருதைப் பெற்றுவிட்டு தன் சொந்த கிராமமான காமயகவுண்டன்பட்டிக்குத் திரும்பிய லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, ஊர் மக்கள் திரண்டு நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், உறவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என அனைவரும் ஒன்று திரண்டு தாரை தப்பட்டை முழங்க, வானவேடிக்கைகளுடன் அவருக்கு மலர்மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
