மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் போர் 15 நாட்களைக் கடந்து கொழுந்துவிட்டு எரியும் நிலையில், இதைப் பயன்படுத்திக்கொண்டு வடகொரியா தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமையான இன்று, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது வடகொரியா. “எங்களை மிரட்ட நினைக்காதீங்க.. நாங்களும் ரெடிதான்!” எனச் சொல்லாமல் சொல்லும் வகையில் கிம் ஜாங் உன் நடத்திய இந்த சோதனை, தென் கொரியா மற்றும் ஜப்பானை கதிகலங்க வைத்துள்ளது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தி வரும் ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே வடகொரியா இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. “இந்த ராணுவப் பயிற்சி என்பது எங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை!” என வடகொரியா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த 10 ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்காவுக்கு விடப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா ஒரு பக்கம் ஈரானை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த ‘திடீர்’ மூவ் உலகப் போர் அபாயத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
