ஈரான் – அமெரிக்கா போரால் உலகமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளை கொதிப்படையச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியதால், விலையைக் கட்டுப்படுத்த “ரஷ்யா மீதான எண்ணெய் தடையை 30 நாட்களுக்கு நீக்குகிறோம்” என அமெரிக்கா அறிவித்துள்ளது. நேற்றைய எதிரியான ரஷியாவையே தஞ்சம் அடையும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் போரால் கதிகலங்கிப் போயுள்ள அமெரிக்கா, இன்னொரு பக்கம் பொருளாதாரத்தைச் சீர் செய்ய எடுத்த இந்த ‘மாஸ்டர் பிளான்’ இப்போது மற்ற நாடுகளுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.

​அமெரிக்காவின் இந்தத் திடீர் பல்டிக்கு ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “அப்படியே மாத்திப் பேசுறீங்களே.. இது நியாயமா?” என ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 7 நாடுகளில் 6 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. உக்ரைன் போரின் போது “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக்கூடாது” என இந்தியாவையும், ஐரோப்பிய நாடுகளையும் மிரட்டிய அமெரிக்கா, இப்போது தனக்கு ஒரு கஷ்டம் என்றதும் தடையை நீக்கியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கனடா, ஜெர்மனி மற்றும் நார்வே நாட்டுத் தலைவர்கள், “இது சரியான தீர்வல்ல” என ட்ரம்பின் முகத்திற்கு நேராவே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஈரானுடனான போரில் அடிமேல் அடி வாங்கும் அமெரிக்கா, இப்போது நட்பு நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து தனித்து விடப்பட்டுள்ளது.