மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கட்டி வரும் நிலையில், ஈரானின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ‘கார்க் தீவு’ (Kharg Island) மீது அமெரிக்கா நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி நடைபெறும் இந்தத் தீவை இலக்கு வைத்து, அமெரிக்கா தனது நவீன ரக சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தகர்த்துள்ளது. இதுகுறித்து அதிரடி காட்டியுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ நிலைகளும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. உலகம் இதுவரை பார்த்திராத நவீன ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன.. எங்களை எதிர்க்கும் சக்தி ஈரானிடம் இல்லை!” என மார்தட்டியுள்ளார். ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் சீண்டினால் விளைவு இன்னும் மோசமாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கொதிப்படைந்துள்ள ஈரான், இப்போது ஆக்ரோஷமான பதிலடியைத் தொடங்கியுள்ளது. “எங்கள் மண்ணில் சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்! அமெரிக்காவுக்குத் தொடர்புடைய அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழித்து ‘சாம்பல் மேடாக’ மாற்றுவோம்!” என ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனிக்கே குறி வைக்கப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த ஈரான் நேற்று முதல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் நேரடி மோதலில் இறங்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
