மத்திய கிழக்கில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர், இப்போது உலகத்தையே உலுக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் முன்னாள் தலைவர் அயதுல்லா கமேனியை குறிவைத்து அமெரிக்கா தொடங்கிய இந்த யுத்தம், இப்போது அமெரிக்காவுக்கே வினையாக முடிந்துள்ளது. காயம்பட்ட சிங்கமாய் சீறும் ஈரான், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் ‘பிரின்ஸ் சுல்தான்’ விமானப் படைத் தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் முதுகெலும்பாகக் கருதப்படும் 5 ராட்சத KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. “விமானங்கள் முழுசா அழியல, ரிப்பேர் தான்” என அமெரிக்கா முட்டுக்கொடுத்தாலும், ஈரானின் இந்தத் தாக்குதல் வாஷிங்டனை அலற விட்டுள்ளது.

​இந்தக் கொடூரப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில் 6 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம், அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. “எங்கள் வீரர்களின் தியாகம் வீண் போகாது.. ஈரானுக்குப் பதிலடி கொடுப்போம்!” என டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் (X) தளத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். ஆனால், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோ (IRGC), “எங்களுடைய மெயின் ஏவுகணைகளை இன்னும் நாங்க பயன்படுத்தவே இல்லை.. 6 மாசம் போர் நடந்தாலும் சந்திக்கத் தயார்!” என அதிரடி சவால் விடுத்துள்ளது. ரஷ்யாவின் ரகசிய உதவியுடன் ஈரான் நடத்தும் இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.