ஆந்திரப்பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டம் உய்யாலவாடா மண்டலம் துடுமுலதின்னே கிராமத்தில், ஒரு தந்தை தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர் தனது மகள்களை ஆட்டோவில் வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், குளிர்பானத்திலோ அல்லது பாலிலோ விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். குழந்தைகள் மூன்றும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த தந்தையும் விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், குழந்தைகளின் உடலில் எவ்வித காயங்களும் தழும்புகளும் கண்டறியப்படவில்லை, இதனால் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்பத் தகராறு அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட ஏதேனும் கடுமையான மன உளைச்சல் காரணமாக இந்த விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தற்கொலை மற்றும் கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.