மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் விவாகரத்து தொடர்பாக மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் துணையின் மீது சுமத்தப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் மன ரீதியான கொடுமையாகக் (Mental Cruelty) கருதப்படும் என்று கூறி, கணவன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பு னேயைச் சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவி எவ்வித ஆதாரமும் இல்லாமல் தனது நடத்தையின் மீது சந்தேகம் கொள்வதாகவும், அண்ணி உறவுமுறையிலான பெண்ணுடன் கள்ளக்காதல் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மத்தியில் அவதூறு பரப்புவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தனக்கு இருக்கும் தோல் நோய் குறித்து மனைவி தொடர்ந்து கேவலமாகப் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடியாக அந்தப் பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகாரையும், மாமனார் மீது தவறான முறையில் நடந்துகொண்டார் என்ற பகீர் புகாரையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஜே.கரத், கணவன் தரப்பில் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் முறையான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனைவி தன் தரப்புக் குற்றச்சாட்டுகளுக்கு வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் கூட எவ்வித மின்னணு அல்லது நம்பகமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்

என்பதைக் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு, நிரூபிக்கப்படாத இத்தகைய அவதூறுகள் குடும்ப வாழ்க்கையில் மன ரீதியான சித்திரவதையே என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், திருமண பந்தத்தை ரத்து செய்து கணவனுக்கு விவாகரத்து வழங்கி அதிரடி உத்தரவிட்டது.