சீனாவின் கடல் எல்லைகளில் வெளிநாட்டு உளவு அமைப்புகள் ஆமைகள் மற்றும் மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களைப் பயன்படுத்தி ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் சீனாவின் அரசு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, கடலில் வாழும் பெரிய அளவிலான ஆமைகள் மற்றும் மீன்களின் உடலில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டு உளவு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த “உளவு ஆமைகள்” குறிப்பிட்ட கடல் பகுதிகளில் நீந்தி, அங்குள்ள நீரின் வெப்பநிலை, உவர்ப்புத்தன்மை மற்றும் கடல் நீரோட்டங்கள் போன்ற முக்கியமான தரவுகளைச் சேகரித்து, செயற்கைக்கோள் வழியாக வெளிநாடுகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றன. கடலுக்கு அடியில் நடக்கும் இந்த மறைமுக உளவுப் போர் தங்களுக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகச் சீனா அஞ்சுகிறது.
இந்த கடல்சார் தரவுகளைக் கொண்டு வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் சீனாவின் கடலோரப் பகுதிக்கான துல்லியமான “நீர்மூழ்கி வரைபடங்களை” உருவாக்குகின்றன. இந்த வரைபடங்கள் சீனாவின் கடற்படைப் பாதுகாப்புப் பாதைகளில் உள்ள பலவீனமான பகுதிகளைக் கண்டறியவும், அந்நிய நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீன எல்லைக்குள் கண்டறியப்படாமல் ரகசியமாக நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தங்களின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய நவீன உளவு சாதனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கடல் உயிரினங்களைக் கண்டறிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு தங்களது நாட்டு மீனவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சீனா அறிவுறுத்தியுள்ளதுடன், இதைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பெரும் தொகையைப் பரிசாகவும் அறிவித்துள்ளது.
