சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அவர்களுக்குக் கட்சியின் ஐடி விங் (IT Wing) மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரிசு அரசியல் முயற்சிக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடமே நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்நிலையில், மிதுன் அவர்களுக்குப் பதவி வழங்குவது குறித்த பேச்சுக்களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவின் ஐடி விங் முக்கியப் பிரமுகரான ராஜ் சக்தியன் அவர்கள் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியலில் இல்லாத பொதுச்செயலாளரின் குடும்பத்தினரைக் தொடர்ந்து விவாதத்திற்குள் இழுத்து, கட்சிக்கு எதிராக ஒரு தவறான பிம்பத்தை (Narrative) உருவாக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் உட்கட்சி நிகழ்வுகளால் தொண்டர்களும், அடுத்த தலைமுறையினரும் பல வலிகளைச் சுமந்து வரும் வேளையில், இதுபோன்ற தேவையற்ற வாரிசு அரசியல் பேச்சுக்கள் எங்கு பேசப்பட்டிருந்தாலும் அது முற்றிலும் தவறு என்று கட்சியின் முடிவுக்கு எதிராக அவர் பகிரங்கமாகக் குரல் எழுப்பியுள்ளது தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.