தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மீறி குடிமகன்களிடம் கூடுதல் பணம் வசூலித்ததாகக் கடந்த 20 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 200 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த அதிரடி வேட்டை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் இந்த கூடுதல் கட்டண வசூலைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து, மதுபானங்களுக்குக் கூடுதல் பணம் வாங்கும் நடைமுறை நீடித்தால் இன்னும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.