பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் பர்ஹாபதர் பகுதியில், 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். அதிகாலை 4 மணியளவில், அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில், சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பு அந்த வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது, வீட்டில் வளர்த்து வந்த மூன்று கோழிகள் அசாதாரணமாக சத்தம் போட்டன.

இந்த சத்தத்தைக் கேட்ட அந்த மூதாட்டி விழித்தபோது, வீட்டின் ஒரு மூலையில் பாம்பு இருப்பதை பார்த்து அச்சத்தில் உறைந்தார். பின்னர் மூதாட்டி, அமைதியாக வீட்டை விட்டு வெளியே வந்து, அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாம்பு பிடிப்பாளர் அமர்நாத் குப்தா அந்த இடத்திற்கு விரைந்து வந்து, பாம்பை பாதுகாப்பாக பிடித்து பெட்டியில் அடைத்தார்.

“இந்த பாம்பின் விஷத்தால் ஒரு யானை கூட இறக்கக்கூடும்” என்றார் அவர். இந்த மீட்புப் பணியை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர். பின்னர் பேசிய மூதாட்டி, “இந்த கோழிகளை 5 வருடங்களாக வளர்த்து வருகிறேன். இந்த கோழிகள் என் உயிரைக் காப்பாற்றும் நாளொன்று வரும் என்று நினைக்கவே இல்ல” என்று உணர்ச்சியுடன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்த அமர்நாத் குப்தா, குடிசை வீடுகளில் கோழி, புறா போன்ற விலங்குகளை வளர்ப்பது ஆபத்தானது என்றும், அவற்றின் வாசனை பாம்புகளை ஈர்க்கும் என்றும் கூறினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.