தலைநகர் டெல்லியில், குடிபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர், தனது காரை நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 9-ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் வசந்த் விஹார் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் 8 வயது சிறுமி பிம்லா, அவரது பெற்றோர், மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் ஓட்டுநர் துவாரகாவை சேர்ந்த உத்சவ் சேகர் (40) என்பவர் என அடையாளம் காணப்பட்டார். ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

சம்பவத்தன்று அவர் நொய்டாவிலிருந்து தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் காரை ஓட்டியதாகவும், அதனை மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாலை ஓரத்தில் உள்ள சிவா கேம்ப் அருகே, பாதிக்கப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வெள்ளை நிற ஆடி கார் நேராக ஏறி மோதியது. பின்னர், அந்த கார் ஒரு லாரியின் மீது மோதியது. பாதிக்கப்பட்டவர்களில் லதி (40), அவரது கணவர் சபாமி சிர்மா (45), மகள் பிம்லா (8), ராம் சந்தர் (45) மற்றும் நாராயணி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மதுவில் வாகனம் ஓட்டியது, மனித உயிருக்கு ஆபத்தான செயல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே, ஏப்ரல் மாதங்களிலும் டெல்லியில் இதேபோன்ற மோசமான விபத்துகள் நடந்துள்ளன.