தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வில்லிசேரியை சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவரும் அவரது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது விவசாய வேலைகளை பார்த்து வருவார். இவர்களுக்கு கௌசல்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர்கள் தினமும் சாப்பிட்டு வேலைகளை முடித்து விட்டு சீக்கிரமாகவே தூங்கி விடுவர்.

சம்பவத்தன்று செல்வராஜூம், அவரது குடும்பத்தினரும் வழக்கம் போல வேலைகளை முடித்துவிட்டு இரவு தூங்க செல்வதற்கு முன்பு கொசுவர்த்தியை பற்ற‌ வைத்து விட்டு கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர். இந்த நிலையில் இரவு பலமான காற்று வீசியதில் கொசுவர்தியில் உள்ள தீப்பொறி அருகில் இருந்த சாக்கின் மீது விழுந்து தீ பற்றி எரிந்தது.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த மாரியம்மாளின் சேலையிலும் தீப்பொறி பட்டு பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வராஜூம் அவரது மகள் கௌசல்யாவும் உடனடியாக மாரியம்மாள் மீது பற்றிய தீயை அணைக்க முயன்றனர். அப்போது தந்தை மகள்‌ இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் மாரியம்மாளிற்கு உடல் முழுவதும் பலமான தீக்காயம் ஏற்பட்டது.

பின்பு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாய் தந்தை மகள் மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாரியம்மாளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.