கோவை பஜார் காவல் நிலையத்தில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்த 60 வயது முதியவர், மறுநாள் காலை சப்-இன்ஸ்பெக்டரின் பூட்டிய அறைக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஏ.ராஜன் என்பவர், ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு, சுமார் 25 பேர் தன்னைத் துரத்துவதாகக் கூறி, பதற்றத்துடன் பஜார் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.
போலீஸ் தகவலின்படி, இரவுப் பணியில் இருந்த தலைமைக் காவலர் செந்தில் குமார், அவர் கூறியதை சரிபார்த்தபோது அருகில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்தார். அதனால், ராஜனுக்கு காலையில் திரும்பி வருமாறு அறிவுறுத்தினார்.
எனினும், நைசாக ராஜன் இரவு நேரமே முதல் மாடியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டரின் அறைக்குள் நுழைந்து கதவை உள்ளிருந்து பூட்டிக் கொண்டார். மறுநாள் காலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் அலுவலகத்தைத் திறக்க முயன்றபோது, கதவு பூட்டப்பட்டிருப்பதை கவனித்தார். கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ராஜன் தனது வேஷ்டியைப் பயன்படுத்தி சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
#BREAKING | காவல் நிலையத்தில் மரணம்.. வெளியான சிசிடிவி காட்சி #Coimbatore | #Death | #PoliceStation | #TNPolice pic.twitter.com/hVpiMGOIk6
— PttvOnlinenews (@PttvNewsX) August 6, 2025
“>
கோவை நகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் தெரிவித்ததாவது: “சிசிடிவி காட்சிகளில், ராஜன் இரவு 11 மணியளவில் தனியார் பேருந்தில் இருந்து இறங்கி டவுன்ஹால் புறக்காவல் நிலையத்தில் சிறிது நேரம் நின்று, பின்பு பஜார் காவல் நிலையம் நோக்கி விரைவாகச் செல்கின்றார் என்பது பதிவாகியுள்ளது. பின்னர் அவர் வளாகத்திலிருந்தபடி நிலையத்திற்குள் நுழைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றார். சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
ராஜனின் உடல் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணையும், துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ராஜனின் சகோதரியின் கூற்றுப்படி, திருமணமாகாத குடிகாரரான அவர், சமீபத்தில் மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு, மக்கள் தன்னைத் தொடர்ந்து வருகிறார்கள் என்று கூறி வந்துள்ளார். இதுவே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
