கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கீழ் பம்மம் பகுதியில், வீட்டின் கிணற்றுநீரில் தீப்பற்றிய அதிர்ச்சி சம்பவம் வியப்பையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து நாட்களாக அந்த பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள ஆழ்துளை மற்றும் திறந்த கிணறுகளில், தண்ணீரில் இருந்து பெட்ரோல் வாசனை வீசியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரிகள் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெகன் என்ற நபர் தனது வீட்டருகே உள்ள கிணற்றில் தீ வைத்த போது, தண்ணீர் மளமளவென பற்றி எரிந்தது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறை, இந்திய எண்ணெய்க் கழகம், நகராட்சி, மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றை ஆய்வு செய்தனர். கிணற்றுநீரில் பெட்ரோல் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, இந்த வகைத் தீவிரமான கசிவுகள் ஏன் ஏற்பட்டன, அருகில் எரிபொருள் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
