மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது பேரன் சிவ நித்திஷ்(3). நேற்று பெரியசாமி தனது மனைவி மற்றும் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் கீழேகுயில்குடி வரை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மொட்டமலை பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனை சற்றும் எதிர்பாராத மகேஸ்வரி சட்டென்று குழந்தையை தூக்கி சாலை ஓரத்தில் வீசினார். லாரி மோதியதால் பெரியசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மகேஸ்வரி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான காயமடைந்த குழந்தை மற்றும் படுகாயமடைந்த பெரிய சாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மகேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
