சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பிரபல ரவுடியான ராஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. தற்போது ரவுடி தொழிலை விட்டுவிட்டு சாவு நிகழ்ச்சிக்கு சாமியான பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். அதிமுக நிர்வாகியாகவும் வேலை பார்த்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் மதிய உணவு சாப்பிடுவதற்காக ராஜ்குமார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது கையில் அரிவாளுடன் வந்த வாலிபர்கள் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவரான யுவனேஷ் என்பவரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் கூறியதாவது, நான் இரண்டு வயது குழந்தையாக இருந்த போது எனது தந்தை செந்தில் குமாரை கொலை செய்தனர். அப்போது நான் அறியாத குழந்தை இப்போது நான் பிபிஏ முதலாம் ஆண்டு படிக்கிறேன்.
எனது தந்தை கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் இறந்து விட்டனர். அந்த குற்றவாளிகளில் ராஜ்குமார் ஒருவர். அவர் 2021 ஆம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலை ஆகிவிட்டார். முதலில் நான் தந்தை கொலை செய்யப்பட்டதை பெரிதுபடுத்தாமல் வாழ்ந்து வந்தேன். ஆனால் ராஜ்குமார் என்னை பார்க்கும் போதெல்லாம் உன் தந்தையை நான் தான் கொன்றேன் என்று கூறியதால் எனது மனதில் பழி வாங்கும் எண்ணம் வந்தது.
அடிக்கடி அவர் என்னை சீண்டியதால் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்குமாரை கொலை செய்துள்ளேன் என யுவனேஷ் கூறியுள்ளார். இந்த வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
