ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் கடைகள், பண்பொருள் அங்காடி, கேளிக்கை அரங்குகள், மாடு சந்தை மற்றும் குதிரை சந்தைகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த தேர் திருவிழாவிற்கு பல ஊர்களில் இருந்து மாடு, குதிரை போன்ற விலங்குகள் சந்தை விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதிலும் குதிரை சந்தைகள் மிகவும் பிரபலமான ஒன்று. குறிப்பாக பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் குதிரைகளை பொதுமக்களும், குழந்தைகளும் விரும்பி கண்டு களிப்பர்.‌

அந்த குதிரைகள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் இருந்து சந்தைக்காக கொண்டு வரப்படும். இந்த வருடம் நடைபெற உள்ள தேர் திருவிழாவிற்கு கர்நாடகாவில் இருந்து குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த குதிரைகளை பைரஸ் என்பவர் கவனித்து வந்துள்ளார்.

நேற்றிரவு இவர் குதிரைக்கு தண்ணீர் வைப்பதற்காக குதிரையை கட்டிப் போட்டிருந்த தோட்டத்தின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்துள்ளார். அந்த வாளியில் வயலுக்குத் தெளிக்கும் யூரியா இருந்ததே கவனிக்காமல் அதில் எடுத்து வந்த தண்ணீரை குதிரைக்கு வைத்துள்ளார்.

அப்போது அந்த தண்ணீரை குடித்த 6 குதிரைகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் எல்லாம் வேறு வாளியில் இருந்த தண்ணீர் குடித்ததால் அதற்கு ஒன்றும் ஆகவில்லை. திருவிழாக்கென வந்த குதிரைகள் திடிரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.