உடன்குடி அருகே 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (20). இவருக்குக் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்த இசக்கிராஜிற்கு, அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே, அந்தப் பெண் தனது 4 வயது மகளுடன் உடன்குடி செட்டியாபத்தில் குடியேறினார். அங்கு இசக்கிராஜ் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

 கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுமிக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி இசக்கிராஜும், அந்தப் பெண்ணும் சிறுமியை உடன்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றித் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், அதனால் ஏற்பட்ட காயங்களாலேயே மூச்சுத் திணறி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இசக்கிராஜைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இசக்கிராஜ் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்: “சம்பவத்தன்று அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அங்கு தனியாக இருந்த 4 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினேன். அப்போது சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. திடீரென வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயிடம், குழந்தை தண்ணீர் குடித்தபோது மூக்கு வழியாகச் சென்றதால் மயங்கிவிட்டதாகக் கூறி நாடகமாடினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இசக்கிராஜ் மீது கொலை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.