கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், சக மாணவருடன் பேசிய ஆத்திரத்தில் முதலாம் ஆண்டு மாணவியைக் கத்தியால் குத்திய காதலனை போலீஸார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், 17 வயது மாணவி ஒருவர் பி.டெக். ஐ.டி. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவர் ஒருவருடன் அந்த மாணவிக்குக் கடந்த 3 மாதங்களாகக் காதல் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே, அதே கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த போதிலும், அவரிடம் நட்பு ரீதியாகப் பேசி வந்துள்ளார். இது மாணவியின் காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. “அவனிடம் பேசக் கூடாது” எனப் பலமுறை காதலன் கண்டித்தும், மாணவி தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை வகுப்பறையில் அந்த மாணவியும், மற்றொரு மாணவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட காதலன் ஆவேசமடைந்துள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த மாணவர் தனது பையிலிருந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாணவியின் கன்னம் மற்றும் கையில் சரமாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை மீட்ட சக மாணவர்கள், அவரைச் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த காதலனை விரைந்து கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வகுப்பறைக்குள்ளேயே மாணவி குத்தப்பட்ட இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.