ராஜஸ்தான் மாநிலம் ஃபார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ஜோத்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஜோஜாரி ஆற்றில் கலப்பதால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தொழிற்சாலை கழிவுகளுடன் கலந்து மாசடைந்த நீராக கரையோரப் பகுதியில் தேங்கி நிற்கிறது.

அவ்வபோது அந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் துர்நாற்றம் வீசி மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் பார்மர் பகுதிக்கு சென்ற ராஜஸ்தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி கேகே விஷ்ணுயிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது அவர் கூறியதாவது, பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராளமானதுடன் இருக்கிறார்.

நமது முதல் மந்திரி பகவான் கிருஷ்ணரை வேண்டும் போதெல்லாம் இங்கு மழை பெய்கிறது. இதனை அடுத்து இந்திரனிடம் சொல்லி மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக்கிறது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் சவுத்ரி கூறியதாவது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனையின் பொறுப்பை கடவுள் மீது சுமத்துவது கேலிக்கூத்தாக இருக்கிறது. மந்திரி பிரச்சனையை திசை திருப்புகிறார். அது மட்டும் இல்லாமல் பிரச்சனையை அரசாங்கத்தால் சரி செய்ய முடியாது. பிரார்த்தனையால் தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுவது அபத்தமானது என குற்றம் சாட்டியுள்ளார்.