ஆந்திர பிரதேசம் மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கர். இவர் நல்கொண்டா மாவட்டம் சாலக்குர்தி தாண்டவை பகுதியில் பிரபலமானவர். விஜயநகர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாரப்பா(58), பிரகாஷ்(29) மற்றும் லாரி டிரைவர் சுரேஷ். இவர்கள் 3 பேரும் பாஸ்கரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.
பின்பு பாஸ்கரை சந்தித்த அவர்கள் தங்களிடம் 1/2 கிலோ எடையுள்ள ஒரிஜினல் தங்க நாணயங்கள் உள்ளதாகவும், அதனை விற்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் அந்த தங்க நாணயங்களின் விலை மிக உயர்ந்தது, ஆனால் அதனை குறைவான விலைக்கு விற்க முடிவு செய்ததாகவும் கூறினர்.
இதனை நம்பிய பாஸ்கர் அவர்கள் மூவரிடமும் ரூபாய் 8 லட்சம் ரொக்க பணமாக கொடுத்து அந்த நாணயங்களை வாங்கியுள்ளார். பின்னர் அந்த நாணயங்களை சோதனை செய்து பார்த்ததில் போலி என்பது தெரிய வந்தது. உடனடியாக பாஸ்கர் மாரப்பா உட்பட 3 பேரையும் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரப்பா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். லாரி டிரைவர் சுரேஷ் தலைமறைவாகியதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
